வங்காள விரிகுடாவில் புதிய காற்றழுத்த தாழ்வு!
வங்காள விரிகுடாவில் ஒக்டோபர் 23ஆம் திகதியளவில் தாழமுக்கப் பகுதி உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதையடுத்து, குறிப்பிட்ட ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படையினர் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம், இது தொடர்பில் மஞ்சள் நிலை வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் ஒக்டோபர் 22ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு வெளியிடப்பட்ட விசேட வானிலை அறிக்கையின்படி, தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்மித்த கிழக்கு-மத்திய வங்காள விரிகுடா பகுதிகளில் தாழமுக்கப் பகுதி உருவாகும் சாத்தியம் காணப்படுகின்றது.
தாழமுக்கப் பகுதி
இந்தத் தாழமுக்கப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, மேலும் வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, வட அகலாங்கு 10° முதல் 20° வரையிலும், கிழக்கு நெட்டாங்கு 80° முதல் 95° வரையிலும் அமைந்துள்ள ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் அனைத்து கடற்படைக் கப்பல்கள் மற்றும் படகுகளும் உடனடியாகப் பாதுகாப்பான பகுதிகளுக்கு நகருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மேலும், பொதுமக்களும் மீனவ சமூகத்தினரும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அடுத்தடுத்த வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானித்து, அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |