இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய அலைபேசி செயலி (அப்) அறிமுகப்படுத்தப்படும் என்று சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையின் மேம்பாடு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள மற்றும் எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டதுடன், ஜனவரி முதல் இந்தக் கையடக்கத் தொலைபேசிச் செயலியை பயன்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய அலைபேசி செயலி
அதேபோன்று, இந்த செயலி மூலம் சுற்றுலாப் பயணிகள் விரும்பினால் அவர்கள் இருக்கும் இடத்தை நோக்குவதற்கு அனுமதி வழங்குதல், அவர்கள் தொலைந்து போனால் அல்லது ஏதாவது பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டி ஏற்பட்டால் அதன்மூலம் அதனை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் விளக்கமளித்தார்.
மேலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக சுற்றுலாப் பயணிகளை கவரும் ஒவ்வொரு கடற்கரைப் பகுதிகளிலும் சுற்றுலா காவல்துறை அணியொன்றை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
விசேடமாக 2023 இல் 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஹரின் பெர்னாண்டோ இதன்போது தெரிவித்தார்.
காணி அளவிடும் நடவடிக்கைகள்
அதேபோன்று, காணி அளவிடும் நடவடிக்கைகள் தாமதமடைவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இந்த அளவிடும் பணிகளை வெளித் தரப்பினரைக் கொண்டு மேற்கொள்ள முடியுமா என பரிசீலித்து விரைவில் இந்த அளவிடும் பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பான அறிக்கையொன்றை அடுத்த குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் பரிந்துரைத்தார். இவற்றுக்கு மேலதிகமாக, பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் காணிகள் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.