2025 இல் அரச ஊழியர்கள் வழங்கப்போகும் மாறுபட்ட உறுதிமொழி!
ஜனவரி முதலாம் திகதி அரச சேவையாளர்கள் தமது கடமைகளை ஆரம்பிக்கும் போது வழங்கும் உறுதிமொழி இம்முறை வேறுபட்டதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள ‘தூய்மையான இலங்கை’ திட்டத்துடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியாக அது அமையும் என ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தியோகபூர்வமாக ஆரம்பம்
முறையான சுகாதாரமான சூழலை உருவாக்குதல், இலஞ்சம் மற்றும் ஊழலை அரசு மற்றும் தனியார் துறையினரிடம் இருந்து ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட புதுமையான திட்டங்களுடன் 'தூய்மையான இலங்கை' என்ற கருத்தை பல வழிகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
விழிப்புணர்வு
அத்தோடு, ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் அரச சேவை உறுதிமொழியை வழங்கும் போது, இம்முறை ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிமொழியும் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முதற்கட்டமாக 'தூய்மையான இலங்கை' வேலைத்திட்டம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அதனை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதற்கும் அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் பெற்றுக்கொள்ளப்படும் என அதிகாரி மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |