இந்தியர்களுக்காக இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய முறைமை...!
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு டிஜிட்டல் முறையில் நிகழ்நிலையில் பணம் செலுத்தும் புதிய முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, UPI மூலம் QR குறியீட்டைப் பயன்படுத்தி நிகழ்நிலையில் பணம் செலுத்த முடியும் என கூறப்படுகிறது.
இதில், NPCI சர்வதேச கொடுப்பனவுகள் லிமிடெட் மற்றும் இலங்கையில் லங்கா பே பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.
தடையற்ற கொடுப்பனவு
இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து சுமார் 10,000 வணிக நிறுவனங்கள் அவர்களை இந்த முறையில் பதிவு செய்துள்ளன.
மேலும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் தடையற்ற கொடுப்பனவு வசதிகளுக்காக 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆகும்போது இந்த எண்ணிக்கையை 65,000 வரை அதிகரிக்கவுள்ளதாகும் திட்டமிடப்பட்டுள்ளது.
UPI பணப்பரிமாற்ற முறையை நிகழ்நிலையில் அறிமுகம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கையில்,
“தமது இந்திய விஜயத்தின் "தொலைநோக்கு அறிக்கை"யின் பிரகாரம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ள UPI பணப் பரிமாற்ற முறை, சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் இதன்மூலம் தமிழ்நாடு, மும்பை ஆகியவற்றுடன் இலங்கை தொடர்புகளை ஏற்படுத்தும் எனவும் இதனால் 400,000 வர்த்தகர்கள் பயனடைவார்கள் எனவும் கூறியிருந்தார்.
இந்திய சுற்றுலாப்பயணிகள்
தவிரவும் இந்திய வெளியுறவு அமைச்சருடனான பேச்சுவார்த்தை நம்பிக்கைக்குரிய முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதாகவும் மொரீஷியஸுடனான ஒத்துழைப்பு புதிய தொடர்புகளை மேம்படுத்தும் முயற்சியை உறுதிசெய்யும் எனவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைக்கு அதிகளவில் வருகை தரும் இந்திய சுற்றுலாப்பயணிகளிற்கு இந்த முறைமை பயனளிக்கும் அதே சமயம் எதிர்காலத்தில் இலங்கைக்கு வருகை தரும் இந்தியர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |