நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கான புதிய விதிகள்! பிரித்தானிய அரசின் அறிவிப்பு
பிரித்தானியாவில் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கான விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களை அந்நாட்டு உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ளார்.
சுமார் 200,000 பதில்கள் கிடைத்த பொதுமக்கள் ஆலோசனைக் கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்தப் புதிய குடிவரவு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, பிரித்தானியாவில் ஐந்து ஆண்டுகள் வசித்துவிட்டாலே தானாகவே நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படும் என்ற நடைமுறை மாற்றப்பட்டு, இனிமேல் அதனைப் பெறுவதற்கு குறிப்பிட்ட தகுதிகளையும் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர வதிவிட உரிமை
நிரந்தர வதிவிட உரிமைக்கான அடிப்படை காத்திருப்பு காலம் ஐந்து ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படவுள்ளதாகவும், அதேவேளை சில தகுதிகளைக் கொண்டவர்களுக்கு விரைவான வழிமுறைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிப்பவர்கள், குற்றப் பதிவுகள் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். உயர்தர ஆங்கில மொழித் திறனைக் கொண்டிருக்க வேண்டும். பிரித்தானிய அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய நிலுவைக் கடன்கள் இருக்கக்கூடாது. குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கான தேசிய காப்புறுதிப் பங்களிப்புகளைச் செலுத்தியதற்கான பதிவுகளைக் கொண்டிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆண்டுக்கு 50,000 பவுண்டுகளுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு ஐந்து ஆண்டுகளில் நிரந்தர வதிவிட உரிமை பெறுவதற்கான வாய்ப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பிட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யும் மருத்துவர்கள், தாதியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பராமரிப்புப் பணியாளர்களுக்கும் ஐந்தாண்டு வழிமுறை தொடர்ந்து திறந்திருக்கும். ஆனால், இந்தத் தொழில்துறைகளைச் சாராதவர்களும், ஆண்டுக்கு 50,000 பவுண்டுகளுக்கும் குறைவாகச் சம்பாதிப்பவர்களும் நிரந்தர வதிவிட உரிமையைப் பெற 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |