சர்ச்சையை ஏற்படுத்திய சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் : சத்திர சிகிச்சைக்கூடம் மீள் இயக்கம்
யாழ்ப்பாணம் (Jaffna) - சாவகச்சேரி (Chavakachcheri) ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைக்கூடம் மீள இயங்க ஆரம்பித்துள்ளது.
இதன்படி, நேற்றையதினம் (27) முதல் சத்திர சிகிச்சைக் கூடத்தில் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சத்திர சிகிச்சை நிபுணர் பேராசிரியர் ரவிராஜ் தலைமையிலான மருத்துவ குழுவும் புதிதாகப் பொறுப்பேற்ற மகப்பேற்று நிபுணர் சிறீசுபாஸ்கரன் தலைமையிலான மருத்துவ குழுவும் சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளனர்.
வைத்தியசாலை விவகாரம்
இதன்போது, கேர்னியாவிற்கான சத்திர சிகிச்சை, 2 சிசேரியன் சத்திரசிகிச்சை மற்றும் 4 சிறு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அண்மையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் பூதாகரமாக வெடித்திருந்த நிலையில் புதிய வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ரஜீவ் சத்திர சிகிச்சைப் பிரிவை இயக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதேவேளை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக சத்திரசிகிச்சைக் கூடக் கட்டிடம் மற்றும் விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக் கட்டிடம் ஆகியன நிர்மாணிக்கப்பட்ட போதிலும் ஆளணிப் பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வருடக் கணக்கில் சத்திர சிகிச்சைக் கூடத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டதன் பயனாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக நோயாளர்களை அனுப்பும் நிலைமை வெகுவாகக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |