அடுத்த வரவு - செலவுத் திட்டத்திற்கான முதற்கட்ட பேச்சு நிறைவு
அரசாங்கத்தின் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்காக ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர்களிடம் முன்மொழிவுகளை கோருவதற்கான முதலாவது கலந்துரையாடல் இன்று இடம்பெற்றுள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் கிராம, பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய விடயங்கள், தேசிய மட்டத்தில் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துதல் உள்ளடங்கலாக ஏனைய துறைகள் தொடர்பில் பின்வரிசை உறுப்பினர்களின் முன்மொழிவுகளும் பெற்றுக் கொள்ளப்பட்டன.
உள்ளூர் சேதன விவசாயத்தை ஊக்குவித்தல், ஏற்றுமதி உற்பத்தியை அதிகரித்தல், தொழில்துறை மற்றும் சேவைத் துறையில் கிராமப்புற சமூகத்தின் பங்களிப்பை பெற்றுக்கொள்வது குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
பாரம்பரிய தொழில்முனைவோரை மேம்படுத்துதல், சுற்றுலா துறையை மேம்படுத்துதல், மீன்வளத் துறையை விரிவுபடுத்துதல், மலர் மற்றும் அலங்கார இலை வளர்ப்பாளர்கள், விலங்கு உற்பத்தி துறை ஆகியவற்றை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பின்வரிசை உறுப்பினர் இதன்போது முன்மொழிவுகளை முன்வைத்தனர்.
தாம் ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சராக சேவையாற்றிய காலப்பகுதியில் அப்போது நாட்டின் பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் துறை சார்ந்தவர்களினால் வரவு செலவுத் திட்ட முன்மொழிவை தயாரிக்கும் போது ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதன்போது குறிப்பிட்டார்.
இந்த செயற்பாடு வெற்றிகரமான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியதனால் இம்முறை வரவு செலவுத் திட்ட தயாரிப்பிலும் முடிந்தளவு பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் முன்மொழிவுகளை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இதன்போது சுட்டிக்காட்டினார்.