இலங்கைக்கு செப்ரெம்பரில் காத்திருக்கும் பேராபத்து - விடுக்கப்பட்ட எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரை இலங்கை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகள் தர்க்கரீதியாக நிரூபிக்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டதாக செயலாளர் கூறுகிறார்.
வெளிநாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஜெனீவாவில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் அவை மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் அவர் கூறினார்.
"ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் சவால்களும் இலங்கையும்" என்ற தலைப்பில் அரச தலைவர் ஊடக மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Michelle Bachelet இன் தற்போதைய அறிக்கை, போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை விட, சுதந்திர நாட்டின் உள்ளக அரசியலை மையப்படுத்தியுள்ளதாக ஜெயநாத் கொலம்பகே தெரிவித்தார்.
"இதுபோன்ற உள் விவகாரங்களை விசாரிக்க அலுவலகத்திற்கு உரிமை உள்ளதா என்றும் அது ஐக்கிய நாடுகளின் சாசனத்தின்படி உள்ளதா என்றும் நாங்கள் விசாரித்தோம். வாதம் உள் விவகாரங்களில் தலையிடுவது அல்ல, மாறாக ஒரு நாட்டின் அர்ப்பணிப்பு மற்றும் வெற்றியை ஆதரிப்பதாகும்," என்று அவர் கூறினார்.
மனித உரிமைகள் பேரவையின் தலைவருடன் இலங்கைக் குழுவும் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகவும் அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2022 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள 51 ஆவது அமர்வு இலங்கைக்கு அடுத்த சவாலாகும் என வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே குறிப்பிட்டார்.
காலக்கெடுவுடன் கூடிய முறையான திட்டத்தை தயாரிப்பது அவசியமானது எனவும் சிவில் சமூகம், அறிஞர்கள் உட்பட அனைவரினதும் ஆதரவும் தேவையும் உள்ளது எனவும் தெரிவித்தார்.
வெளிநாட்டில் இலங்கைக்கு எதிராக விடுதலைப் புலிகளின் சித்தாந்தவாதிகள் மற்றும் அனுதாபிகள் வெகு சிலரே எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அது இலங்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனவும் .ஜெயநாத் கொலம்பகே தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அவர்களையும் நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைக்க வேண்டும் எனவும், பேச்சுவார்த்தை மூலம் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும் என நம்புவதாகவும் வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டரை வருடங்களில் குறிப்பாக கடந்த ஆறு மாதங்களில் ஏற்பட்டுள்ள தெளிவான முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட வெளிவிவகார செயலாளர், பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம், விடுதலை போன்ற பல சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.