தரம் 6 ஆங்கில பாடத்திட்ட சர்ச்சை - வீட்டுக்கு அனுப்பப்படும் அதிகாரிகள்: மேர்வின் சில்வா
புதிய கல்வி மறுசீரமைப்பு மிகவும் அவசியம். அது எமது கலாசாரம் மற்றும் எமது நாட்டுக்கே உரிய வகையில் இடம்பெற வேண்டும். சர்வமதத் தலைவர்கள், துறைசார் நிபுணர்களுடன் இது சம்பந்தமாகக் கலந்துரையாட வேண்டும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "பெற்றோர்களிடம் இருந்தும் கல்வி மறுசீரமைப்பு பற்றி ஆலோசனை பெறவேண்டும்.
எனவே, கல்வி மறுசீரமைப்பை ஒரே நாளில் செய்ய முடியாது. முறையாக அதற்குரிய பணி இடம்பெற வேண்டும் என்பதே எனது கோரிக்கை என்றார்.
தரம் 6 ஆங்கில பாடத்திட்டம்
தரம் 6 ஆங்கில பாடத்திட்டம் தொடர்பான சர்ச்சை தொடர்பாக தேசிய கல்வி நிறுவகத்தின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் தர்ஷன சமரவீர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தேசிய கல்வி நிறுவகத்தின் மேலும் இரு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேசிய கல்வி நிறுவகத்தினால் தயாரிக்கப்பட்ட தரம் 6 ஆங்கிலக் கற்றல் தொகுதியில் இடம்பெற்ற சர்ச்சைக்கரிய விடயம் தொடர்பான விசாரணை முடியும் வரை, அதன் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரண தனது பதவியிலிருந்து தற்காலிகமாக விலகத் தீர்மானித்துள்ளார்.
சுயாதீன விசாரணை
தேசிய கல்வி நிறுவகத்தினால் தயாரிக்கப்பட்ட மேலதிக கற்பித்தல் உள்ளடக்கங்களில், பொருத்தமற்ற இணையதளக் குறிப்பு சேர்க்கப்பட்டமை குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாக, சுயாதீன விசாரணைக்கு வழிவகுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 6 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மறுசீராய்வு செய்து, அவற்றை 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அத்துடன், அச்சிடப்பட்ட தரம் 6 ஆங்கிலப் பாடத் தொகுதிகளை விநியோகிப்பதையும் கல்வி அமைச்சு இடைநிறுத்தியுள்ளது.
வருங்கால கலைத்திட்ட மேம்பாடுகளின் போது இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதைத் தவிர்க்க, விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில் திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |