விடுதலைப் புலிகளுடன் தொடர்பா? நிலாந்தனிடம் துருவிய TID
மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் நிலாந்தனிடம் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பா என வினவியே பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக ஊடகவியலாளர் நிலாந்தன் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்ட பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான செ.நிலாந்தனிடம் நேற்று மூன்று மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறித்த விசாரணையில் ஊடகவியலாளரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டதோடு ஊடகவியலாளரின் முகநூல் கணக்கு, மின்னஞ்சல் கணக்கு, வங்கி கணக்கு, வட்ஸ் அப் கணக்கு உள்ளி பல விபரங்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு அதிகாரிகள் பெற்றுக்கொண்டதுடன் கடவுச் சொல்லை தருமாறும் கோரியுள்ளனர்.
அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உங்களுக்கு தொடர்பு இருக்கிறதா? தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீங்கள் அங்கத்தவராக இருந்தீர்களா? உங்களது உறவினர்கள் யாரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தார்களா? நீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்துள்ளீர்களா? நீங்கள் எத்தனை வருடங்களாக ஊடகவியலாளராக உள்ளீர்கள்? எந்த எந்த ஊடகங்களுக்கு பணியாற்றுகின்றீர்கள்? உள்ளிட்ட பல கேள்விளை கேட்டு விசாரணை நடத்தியதோடு அதற்கான பதில்களை வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.