பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : அரசுக்கு தொடரும் அழுத்தம்
தற்போதைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு (Aruna Jayasekara) எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) அரசாங்கத்தில் பிரதி அமைச்சுகளுக்கான விடயதானங்கள் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படவில்லை.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்
ஆகவே பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரால் அருண ஜயசேகர 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய விடயங்களில் இவரது செயற்பாடுகள் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டு மக்களுக்கு அறிவிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பிரச்சார மேடைகளில் குறிப்பிட்டார்.
அரசாங்கம் விவாதத்துக்கு எடுத்தல்
ஆனால் அவர் குறிப்பிட்டதை போன்று குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய எதனையும் பகிரங்கப்படுத்தவில்லை. குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான உண்மை தொடர்ந்து மறைக்கப்படுகிறது. ஆகவே நாட்டு மக்கள் உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும்.
பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை அரசாங்கம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
தொழில்நுட்ப காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதை பிற்போடக்கூடாது. விவாதத்தில் பேசப்படும் விடயங்கள் மக்கள் மத்தியில் பேசுபொருளாக வேண்டும். அப்போது தான் பலவிடயங்கள் வெளிவரும்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா

