சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: விவாதம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
சிறிலங்கா சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்றில் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்படவுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் சர்ச்சைக்குரிய நிகழ்நிலைப் பாதுகாப்பு சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா கருத்து சுதந்திரத்தை பறிக்கும் என எதிர்க்கட்சிகளும், சர்வதேச உரிமைகள் அமைப்புகள் குற்றம் சாட்டியிருந்தன.
உயர் நீதிமன்றமானது இந்த சட்டம் அரசியலமைப்புக்கு முரணானது என தெரிவித்து, அதில் திருத்தங்களை கொண்டுவர பரிந்துரைத்தது.
சட்டமூலம்
ஆனால் எந்தவித திருத்தங்களும் செய்யப்படாமல் ஜனவரி 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன பாரபட்சமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி அவருக்கு எதிராக நேற்று(5) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது கட்சியின் உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் கையொப்பமிட்ட இந்த நம்பிக்கையில்லா பிரேரணை, நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குமார குலரத்னவிடம் நேற்று(5) கையளிக்கப்பட்டது.
நம்பிக்கையில்லா தீர்மானம்
இந்த நம்பிக்கையில்லா பிரேரணை, நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்வாங்கப்பட்டு 5 நாட்களின் பின்னர், நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படும் என சமிந்த குமார குலரத்ன தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, குறித்த பிரேரணையை விவாதிப்பதற்கான திகதியை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானிக்கும் என அவர் கூறியுள்ளார்.
இலங்கை வரலாற்றில் நாடாளுமன்ற சபாநாயகர் ஒருவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் மேற்கொள்ளப்படுவது இதுவே, முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |