டொலர் இல்லை- துறைமுகத்தில் காத்து கிடக்கும் எரிபொருள் கப்பல்கள்
டொலர் இல்லை -காத்து கிடக்கும் எரிபொருள் கப்பல்கள்
கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் நான்கு எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்த 150 மில்லியன் டொலர்கள் இல்லாமல் அரசாங்கம் தடுமாறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு டீசல் கப்பல்களும் ஒரு கச்சா எண்ணெய் கப்பலும் ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில் மற்றுமொரு பெற்றோல் கப்பல் நாளை வரவுள்ளது. இந்த நான்கு எரிபொருள் கப்பல்களில் ஒரு டீசல் கப்பலுக்கான கொடுப்பனவின் ஒரு பகுதி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செலுத்த வேண்டிய மீதிப் பணத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கம் மீது கடும் விமர்சனம்
கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அரசாங்கம் மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை சீர் செய்யாமல் தனது அரசியல் நடவடிக்கைகளை தேவையற்ற வகையில் முன்னெடுத்து செல்வதாகவே பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
குறிப்பாக 37 இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்,18 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைமைப்பதவி என நியமனங்களை வழங்கி அவர்களுக்கு செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் என வீண் விரயத்தையே ஏற்படுத்தி வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை துறைமுகத்தில் தரித்து நிற்கும் கப்பல்களுக்கான தாமத கட்டணம் நாளாந்தம் மேலும் அதிகரித்து செல்லவுள்ளமையும் அந்த நட்டத்தை ஈடுகட்ட உள்நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.