தீராத டொலர் நெருக்கடி -கொழும்பு துறைமுகத்தில் காத்து கிடக்கும் எரிபொருள் கப்பல்கள்
பொருளாதார நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து எரிபொருளுக்கும் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டது.இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று எரிபொருட்களை பெற்றனர்.
எனினும் கியூ ஆர் திட்டத்தை கொண்டு வந்த அரசாங்கம் எரிபொருள் தட்டுப்பாட்டை ஓரளவு இயல்பு நிலைக்கு கொண்டு வந்தது.
டொலர் தட்டுப்பாடு
இந்த நிலையில் நாட்டுக்கு எரிபொருளை கொண்டு வரும் கப்பல்களுக்கான கட்டணங்களை செலுத்துவதில் தற்போதும் அரசாங்கம் பாரிய சவாலை சந்தித்து வருகிறது.குறிப்பாக டொலர் இன்மையால் எரிபொருளுடன் வரும் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் காத்து கிடப்பதுவும் அவற்றுக்கான தாமத கட்டணங்கள் பெருமளவில் செலுத்தப்பட வேண்டியியிருப்பதும் நாளாந்த செயற்பாடாகி விட்டது.
இந்த நிலையில் கட்டணம் செலுத்தப்படாத நிலையில் மூன்று எரிபொருள் கப்பல்கள் தொடர்ந்தும் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளன.
காத்து கிடக்கும் கப்பல்கள்
இலங்கையை வந்தடைந்த 100,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கப்பலொன்று கடந்த 23 ஆம் திகதி முதல் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளது.
76,000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய மேலும் இரண்டு கப்பல்கள் பல நாட்களாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.