மணிப்பூர் வன்முறை - மோடி மீதான விமர்சனம் நிராகரிப்பு
கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இதன் காரணமாக ஏறத்தாழ 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சென்ற மாதம் இரண்டு பெண்கள் தொடர்பான காணொளி பரவலாக பகிரப்பட்டதனால், மணிப்பூர் விவகாரம் பாரிய பிரச்சினையாக உருவெடுத்தது.
நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் அளவிற்கு இது முக்கியத்துவம் பெற்றது.
அரசியல்வாதிகள் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது இந்த விவகாரம் குறித்து குற்றம்சாட்டி வருகிறார்கள்.
மோடி மீதான விமர்சனம்
ஆனால், மணிப்பூரில் உள்ளவர்கள் பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா மீது குறை கூறவில்லை என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.
"இது எங்கள் மோதல், இதற்கும் டெல்லிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது மக்களுக்குத் தெரியும் இதனால் மக்கள் அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டையும் முன் வைக்கவில்லை" என்று முதல்வர் மேலும் தெரிவித்தார்.
இந்த கலவரம் கடந்த மே மாதத்தில் இருந்து இடம்பெற்று வருகிறது.
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் மோடியை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
ஆனால், மணிப்பூரில் இருந்து யாரும் பிரதமர் மோடியை குறைகூறவில்லை என்பதை உறுதி செய்து கொள்வதாகவும் அவர் மேலும் கூறினார்.