காவல்துறையையும் இராணுவத்தினரையும் பயன்படுத்துவதற்காக யாரும் அலட்டிக் கொள்ளத்தேவையில்லை - டக்ளஸ் தேவானந்தா
மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான வகையில் காவல்துறையினரையும் இராணுவத்தினரையும் பயன்படுத்துவது தொடர்பாக யாரும் அலட்டிக் கொள்ளத்தேவையில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர், மாவட்டத்திற்கு பொறுப்பான இராணுவ அதிகாரி, பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இன்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
"எமது மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களை களைவதற்கு எமது படையினரையும் எமது இராணுவத்தினரையும் பயன்படுத்துவதில் எந்தவிதமான தவறும் கிடையாது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துக்களை நிறுத்துவதற்கு எதிரான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
நடைபெறுகின்ற வீதி விபத்துக்களில் பெரும்பாலானவை சாரதிகளின் அக்கறையீனம் காரணமாகவே இடம்பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எனவே, காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் ஊடாகவே வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த முடியும்.
அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற வாள் வெட்டுப் போன்ற சமூக விரோதச் செயற்பாடுகளும் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.