அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படவில்லை: அமைச்சர் உறுதி
சுற்றுலா உணவு விடுதிகளின் தேவைக்காகவன்றி ஏனைய தேவைகளுக்காக பாசுமதி அரிசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அண்மையில் அவிசாவளை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரிசி இறக்குமதி
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"கடந்த பெப்ரவரி மாதம் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்ட போது அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியது, அப்போது, சில நாட்களுக்குப் பிறகு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை அரிசி துறைமுகத்தில் சிக்கியதால், அந்த குறிப்பிட்ட அளவு அரிசியை விடுவிக்க ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டது.
ஆனால் தற்போது அந்த நேரம் முடிந்துவிட்டது, அதற்கு பிறகு இன்னும் அரிசி எதுவும் இறக்குமதி செய்யப்படவில்லை.
உணவு விடுதிகளின் தேவை
இந்நிலையில் தற்போது சுற்றுலா உணவு விடுதிகளின் தேவைக்காக மாத்திரமே பாசுமதி அரிசி இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தவிர வேறு எந்தத் தேவைக்காகவும் அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை." என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |