சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்: சந்தேகநபர்கள் கைது!
இலங்கைக்கு சட்ட விரோதமாக இலத்திரனியல் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களை இறக்குமதி செய்த தரப்பினரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் பொருட்களை வெளியே கொண்டு செல்ல முயற்சித்த மூன்று வர்த்தகர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இறக்குமதி நடவடிக்கை
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட விஸ்கி, சிகரெட்டுகள், ஆப்பிள் தொலைபேசிகள், தொலைபேசி பாகங்கள், ஆப்பிள் கைக்கடிகாரங்கள், ஆப்பிள் ஐபேட்கள் மற்றும் பல மின்னணு சாதனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய மூன்று வர்த்தகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சுமார் இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான குறித்த பொருட்களுடன் மூன்று வர்த்தகர்களும் சுங்க வரி செலுத்தாமல் விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயற்சித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
இதன் போது, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் குறித்த மூன்று வர்த்தகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மினுவங்கொட, மஸ்கெலியா மற்றும் கொழும்பு 13 ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மூவரே இவ்வாறாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களும் அவற்றை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த மூன்று வர்த்தகர்களும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |