மாவீரர் துயிலும் இல்லங்களைவிட ஒரு போர் நினைவுத் தூபி வேண்டுமா....
இலங்கையில் ஆயுதமோதல், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டு குழப்பங்களினால் கொல்லப்பட்டவர்களின் நினைவாக நினைவுச் சின்னத்தை அமைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி நிபுணர் குழுவினரின் அமர்வு அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற வேளையில், அங்கே மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு நிலைப்பட்ட ஆளுமைகளும் கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் தெரிவித்திருந்தனர்.
அங்கு கலந்துகொண்ட அனைவரும் கொழும்பில் அமைக்கப்படும் போர் குறித்த நினைவுச் சின்னத்தை முற்றுமுழுதாக நிராகரிப்பதாகவே கூறினார்கள். அதில் நானும் கலந்துகொண்டேன்.
மாவீரர் துயிலும் இல்லங்கள் என்ற எங்கள் நினைவிடங்களை அனுமதித்தாலே எமக்கு போதுமானது என்ற கருத்தை பதிவு செய்தேன். அங்குதான் சிங்கள மக்களுக்கான உண்மைகளும் புலப்படும் என்பதையும் அழுத்தியுரைத்தேன்.
நினைவுகளை அழிக்கும் போர்
இலங்கையில் போரின் ஞாபகச் சின்னங்கள் தொடர்பான சிக்கல், இனப்பிரச்சினை போலவே ஆழமானது. இன ரீதியாக எவ்வாறு பாரபட்சங்களும் ஒடுக்குமுறைகளும் காணப்படுகின்றவோ, அவ்வாறே போர் நினைவுச் சின்னங்களிலும் ஒடுக்குமுறைகளும் பாரபட்சங்களும் வெளிப்பட்டு நிற்கின்றன.
குறிப்பாக ஈழத் தமிழ் மக்களின் ஞாபகங்களை அழிக்கும் வேலைத்திட்டங்களை இலங்கை அரசும் அதன் படைகளும் வரலாறு முழுவதும் செய்து வந்திருக்கிறது. நினைவுகளை அழிப்பதையும் இனவழிப்பின் ஒரு உபாயமாகத்தான் அரசு கையாள்கிறது. இனத்துடன் இனத்தின் நினைவுகளையும் அழித்துவிடுவதே இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக அரசு கருதுகிறது.
அந்த வகையில் ஞாபகங்களை பாதுகாக்கவும் சேமிக்கவும் ஈழத் தமிழ் இனம் போராடி வருகின்றது. இலங்கைத் தீவில் பூர்வீகமாக வாழ்ந்த இனமாக வரலாற்றுச் சான்றுகளின் படி தீர்க்கமாக உரைக்கப்பட்ட போதும், அந்த வரலாற்றுச் சான்றுகளையும் ஞாபகங்களையும் துடைக்கும், அழிக்கும், திரிக்கும் வேலையில் அரசும் அதன் திணைக்களங்களும் மும்முரமாகச் செயற்படுகின்றன.
2009ஆம் ஆண்டில் நடந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைப் போரின் ஊடாக ஈழத் தமிழ் மக்களின் நினைவுச்சின்னங்கள் பலவும் அழிக்கப்பட்டன. இன்று ஞாபகங்களில் மாத்திரம் நினைவுகளை சுமந்த இனமாக சுமைமிக்க இதயங்களுடன் ஈழத் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
போர்வெறிச் சின்னங்கள்
2009இல் மிகக் கொடிய இனவழிப்புப் போரின் வாயிலாக தமிழர்களின் தனித் தேசம், சிங்கள தேசத்துடன் இணைக்கப்பட்ட நிலையில், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்த, தமிழர்களின் தேசத்தை சிதைத்த, தமிழர்களை வெற்றிகொண்ட போர் வெறிச் சின்னங்களை வடக்கு கிழக்கில் இலங்கை அரசும் படைகளும் நிறுவியுள்ளன.
இன்று சிங்கள மக்கள் வடக்கு கிழக்கிற்கு வருகின்ற வேளையில் அந்த ஞாபகச் சின்னங்களை வந்து தரிசிக்கிறார்கள். அங்கு தமது இராணுவத்தின் வெற்றிக் கதைகளை கேட்கிறார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இந்த நிலத்தின் போராளிகளை தேற்கடித்து, இந் நிலத்தை கைப்பற்றியதன் மூலம், இன்னொரு இனத்தின் நிலத்தைக் கைப்பற்றியதையே இந்த வெற்றிப் பெருமிதமும் போர் வெறிச்சினங்களும் உணர்த்துகின்றன. அதேவேளை இந்தப் போர் வெறிச் சின்னங்களின் மத்தியில் தான் ஈழத் தமிழ் மக்களின் வாழ்வு சபிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி டிப்போ சந்தியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு மாவீரரின் நினைவாக சிறுவர்களுக்காக பூங்கா ஒன்றை அமைத்திருந்தனர். அதன் பெயர் சந்திரன் பூங்கா. இன்று அங்கே பாரிய யுத்தக் கல் வைக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழ் மக்களின் இதயத்தை துப்பாக்கிச் சன்னம் ஒன்று கிழிப்பதைப் போல இருக்கும் அந்த நினைவுக்கல்லை தினமும் பார்த்தபடி செல்லும் ஒரு பள்ளி மாணவனின் இதயம் எந்தளவுக்கு காயப்படும்? போரில் பிள்ளைகள் காணமல் ஆக்கப்பட்ட தாயின் காயப்பட்ட மனம் இந்த யுத்தக் கல்லினால் இன்னமும் காயப்படுத்தப்படுகிறதல்லவா?
ஈழத் தமிழர்கள் அந்நியர்களா?
இதேபோன்று ஆனையிறவிலும் பாரிய யுத்த வெற்றிச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையை ஏந்தும் கைகளும் அந்த கைகளுக்கு கீழாக போர் செய்யும் இராணுவத்தின் காட்சிகளும் உள்ளன.
சிங்கள மக்கள் அவற்றை பார்க்கின்ற போது அவர்கள் பெருமிதம் கொள்ளக்கூடும். அல்லது தெற்கில் இருந்து வரும் சிங்கள மக்களுக்கு இராணுவத்தினர் அவற்றை சொல்லி பெருமிதப்படுத்தலாம்.
ஆனால் அந்தக் கொடிய போரில் உயிர்களை இழந்து, உறவுகளை இழந்து, அங்கங்களை இழந்து இன்னமும் துயரில் இருந்து மீள முடியாத நிலையில் உள்ள ஈழ நிலத்தின் மக்களுக்கு அந்தக் காட்சிகள் மீண்டும் மீண்டும் போரையே நினைவுபடுத்தும் விதமாய் அச்சுறுத்துகின்றன.
அதேபோன்றே இறுதிப் போர் நடைபெற்ற பகுதியிலும் போர் வெறியுடன் துப்பாக்கியையும் சிங்கக் கொடியையும் ஏந்தும் இராணுவத்தின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில்தான் ஈழத் தமிழ் மக்கள் பலர் பல்லாயிரக்கணக்கில் இல்லாமல் செய்யப்பட்டார்கள்.
ஈழத் தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்படுவதும் கொல்லப்படுவதும் அங்கவீனப்படுத்தப் படுவதும்தான் இலங்கை இராணுவத்தின் களிப்பு மிகு வீரச் செயலாக இருக்கும் எனில் இலங்கை இராணுவத்தினர் தமக்கு அந்நியமான தேசத்தையே கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் ஈழத் தமிழ் மக்களும் இலங்கை இராணுவத்தினர் வெற்றிகொள்ள வேண்டிய அந்நியர்களாகவே இருக்க வேண்டும். அதனையே குறித்த போர்வெறிச்சின்னம் சொல்லுகிறது.
உலகை ஏமாற்றும் வேலை
இப்படி வடக்கு கிழக்கில் ஈழத் தமிழ் மக்களை தோற்கடித்த விதமாக போர் வெறிச் சின்னங்களை அமைத்துக்கொண்டு கொழும்பில், போர் நினைவுச் சின்னம் அமைப்பது என்பது உலகத்தையும் ஈழத் தமிழ் மக்களையும் ஏமாற்றுகின்ற வேலையாகவே இருக்கும்.
முதலில் இத்தகைய போர்வெறிச் சின்னங்களை போரில் கொல்லப்பட்ட மக்களின் நினைவேந்தல் சின்னங்களாக உருமாற்றப்பட வேண்டும். இத்தகைய போர் வெற்றிச் சின்னங்கள் வாயிலாகவும் தொடர்ந்து ஈழத் தமிழ் மக்கள் இனவழிப்பு செய்யப்படுகின்ற நிலையில், கொழும்பில் போர் நினைவுச் சின்னம் அமைத்து உலகை ஏமாற்ற இலங்கை அரசு முனைகிறது.
அதேபோன்று ஈழத்தில் இருந்த போர் தொடர்பான நினைவுச்சின்னங்கள் பலவற்றையும் இலங்கை அரச படைகள் அழித்துள்ளன. ஈழத் தமிழ் மக்கள்மீது இலங்கை இந்திய அரசுகள் மேற்கொண்ட இனப்படுகொலை நினைவுச் சின்னங்கள் பலவும் ஈழ மண்ணில் நிறுவப்பட்டிருந்தன.
அவற்றில் பல போரின் போது அழிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அந்த இடங்களில் நினைவு நாட்களின் போது நினைவேந்தலை செய்ய முடியாத நிலை ஈழ மண்ணில் காணப்படுகின்றது. கொழும்பில் பொதுச் சின்னம் அமைப்பதற்கு முன்பாக இதனை இலங்கை அரசு ஏற்க வேண்டும்.
போர்வெறிச் சின்னங்கள் நிறுவாத புலிகள்
முப்பது ஆண்டுகாலமாக ஈழ மண்ணில் தனித்துவமான நிழல் தமிழீழ அரசை நடாத்திய விடுதலைப் புலிகள் இயக்கம் எந்தவொரு சமயத்திலும் சிங்கள மக்களுக்கு எதிரான போர் வெறிச்சின்னங்களை நிறுவியதில்லை.
அத்துடன் நாம் சிங்களுக்கு எதிரானவர்களல்ல என்பதையும் அவர்கள்மீது நேசமும் பற்றும் தோழமையும் கொண்டவர்கள் என்பதையும் தலைவர் பிரபாகரன் அவர்கள் பலமுறை எடுத்துரைத்திருக்கிறார்.
ஈழ மண்ணில் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி மாண்ட மாவீரர்களின் நினைவுச் சின்னங்களும் இலங்கை அரச படைகளால் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூருகின்ற சின்னங்களும் மாத்திரமே அன்று தமிழ் ஈழத்தில் அமைக்கப்பட்டன.
அவை ஒடுக்குமுறையையும் அதன் பின்னால் உள்ள அரசியலையும் புரிந்துகொள்ள உதவுகின்ற இடமாகவே இருந்தது. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைத்த மாவீரர் துயிலும் இல்லங்களும் ஒடுக்குமுறைக்கு எதிராக களமாடி மாண்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற இடமாகவே இருந்தது.
தமிழர் பண்பாட்டு மரபான நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சியாக தேசத்திற்காக மாண்டவர்களை மகிமைப்படுத்தி நினைவுகூர்கின்ற பழமையை உணர்த்தும் அதேவேளை, இலங்கை அரசினது ஒடுக்குமுறைக்கு எதிரான ஈழ மண்ணின் விடுதலைப் பயணத்தையும் துயிலும் இல்லங்கள் உணர்த்தின.
உண்மையில் இலங்கையில் என்ன நடந்தது? ஏன் ஈழத் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள்? ஏன் ஈழத் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தினார்கள் என்பதை சிங்கள மக்களும் உலக மக்களும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரே இடம் மாவீரர் துயிலும் இல்லம்தான்.
ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரையில், வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை விட இலங்கையில் வேறு போர் நினைவுத் தூபிகள் தேவையில்லை? என்பதே அறுதியும் உறுதியுமான நிலைப்பாடாகும்
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 28 September, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.