வடக்கு கிழக்கு இணைவதை அனுமதிக்க முடியாது - முஸ்லிம் தரப்பில் இருந்து எதிர்ப்பு
முஸ்லிம்கள் தனியான இனம் என்பதை அடையாளப்படுத்தும் வரை வடக்கு கிழக்கு மாகாணம் இணைவதை அனுமதிக்க முடியாது என ஐக்கிய காங்கிரஸ் கட்சித் தலைவர் மௌலவி. முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கல்முனையில் அமைந்துள்ள கட்சியின் காரியாலயத்தில் இன்றைய தினம் (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“ எமது கட்சியின் நிலைப்பாடானது வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து வாழ வேண்டும் என்பதாகும். அதே வேளை சிங்கள மக்களையும் நாங்கள் ஓரங்கட்டிவிட முடியாது.
முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் வாழும் தமிழ் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ வேண்டும் என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம். ஆனால் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பேசும் கட்சிகள் இனவாத முறையில் செயற்பட்டும், பின்னர் தமிழ் முஸ்லிம் உறவுகளை சந்தர்ப்பத்திற்கேற்ப பயன்படுத்தி வருகின்றன.
இதற்குத் தான் படிப்பது இராமாயணம் இடிப்பது சிவன்கோவில் என்பதை உதாரணமாகக் கூறுவார்கள். அவர்கள் ஒற்றுமையை இந்தச் சமூகத்தில் வலியுறுத்தி பின்னர் குழப்புவார்கள். இதில் தமிழர் முதலமைச்சரா அல்லது முஸ்லிம் முதலமைச்சரா என தமிழ் பேசும் மக்களிடையே உசுப்பேத்தி அரசியல் செய்வதையே நாம் காண்கின்றோம்.
எனவே இவ்வாறான கட்சிகளை மக்கள் நிராகரித்து உண்மைகளை பேசுகின்ற கட்சிகளை ஆதரிக்க முன்வர வேண்டும்.
கல்முனையில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழ முடியாது வேறு வேறு பிரதேச செயலகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் வடக்கு - கிழக்கை இணையுங்கள் எனக் கூறுவது கீழ்த்தனமான அரசியல் செயற்பாடு ஆகும்
ஆகவே வடக்கு கிழக்கில் உள்ள இவ்விரு இனங்களும் பேச வேண்டும். பிரச்சினைகளை அடையாம் கண்டு அவற்றை தீர்ப்பதற்கு முன்வர வேண்டும்” என்றார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
