சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வில்லை: பணிப்பகிஷ்கரிப்பில் வடக்கு - கிழக்கு பல்கலை ஊழியர்கள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் யாழ். பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கம் ஆகியன இணைந்து ஒருநாள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பிலும், கவனயீர்ப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
இன்று நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக ஊழியர்கள் ஒருநாள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பின்னணியில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டம்
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளடக்கப்படாமை மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான திட்டங்கள் முன்வைக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக ஊழியர்கள் ஒருநாள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்கக் கூட்டுக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கம் ஆகியனவும் இணைந்து ஒருநாள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பிலும் கவனயீர்ப்பிலும் ஈடுபட்டனர்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளடக்கப்படாமை மற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் முன்வைக்கப்படாமை தொடர்பில் தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ள தொழிற்சங்கங்கள், தமது நியாயமான கோரிக்கைகளை வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்குவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வாயிலின் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களின் ஊழியர்கள் எதிர்நோக்கும் நீண்டகால சம்பள முரண்பாடுகள் மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படாத நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தினால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வழமையான நிர்வாக மற்றும் சேவை நடவடிக்கைகள் இன்று (18.11.2026) பெரிதும் பாதிக்கப்பட்டன.

2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் பல்கலைக்கழக ஊழியர்களின் நீண்டகால சம்பளப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு முன்வைக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி, 20 சதவீதக் கொடுப்பனவு, மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் சம்பள முரண்பாடுகளைத் தீர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக நிறைவேற்று உத்தியோகத்தர்கள் சங்கம் (SEUEOA), தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் (SEUEU), பல்கலைக்கழக தொழிற்சங்கக் கூட்டுக் குழு (UTUJC) மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தொழிற்சங்க சம்மேளனம் (Inter University Trade Union Federation) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நாடளாவிய ரீதியில் இவ்வடையாள வேலைநிறுத்தம் இடம்பெற்றது.
2027ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு–செலவுத் திட்ட முன்மொழிவுகளில் பல்கலைக்கழக ஊழியர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் சம்பள முரண்பாடுகள் மற்றும் கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைகளுக்குப் போதிய தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |