தொடரும் போர் பதற்றம்: உலக நாடுகளுக்கு தென் கொரியா எச்சரிக்கை
வட கொரியா (North Korea) ரஷ்யா (Russia) சார்பாக உக்ரைன் (Ukraine) போரில் சண்டையிட சுமார் 10,000 ராணுவ வீரர்களை அனுப்பி வைத்து இருப்பதாக தென்கொரியா குற்றச்சாட்டடியுள்ளது.
இவ்வாறு இராணுவ வீரர்களை போரில் ஈடுபடுத்துவது தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும், அதற்கு எதிராக தென் கொரியா (South Korea) கிடைக்கும் அனைத்து வழிகளிலும் பதிலளிக்கும் என்று தென் கொரிய ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
உளவு அமைப்பு
உளவு அமைப்பு வழங்கிய தகவலின் படி, வட கொரியா உக்ரைன் போரில் ஈடுபட்டு இருப்பதாகவும், சிறப்பு படை பிரிவு உட்பட 10,000 வீரர்களை அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், தென் கொரிய ஜனாதிபதி, யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) உளவு அமைப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் திட்டமிடப்படாத அவசர பாதுகாப்பு கூட்டத்தை கூட்டி, உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் வட கொரியா இராணுவ வீரர்களின் தலையீடு குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இராணுவ ஆயுத விநியோகம்
இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற முக்கிய அதிகாரிகள் இராணுவ ஆயுத விநியோகங்களை தாண்டி தற்போது வீரர்களை அனுப்பும் அளவிற்கான வட கொரியா - ரஷ்யா நெருக்கம், தென் கொரியாவிற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகங்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் பொல்டாவா பகுதியில் வடகொரியாவின் ஏவுகணை ஒன்று மீட்கப்பட்டதன் மூலம், இந்தப்போரில், வடகொரியா, ரஷ்யாவிற்கு வெடிமருந்துகளை வழங்குகிறது என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் தற்போதைய செய்தியும் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |