வடகொரியாவின் திருட்டுத்தனம் அம்பலம்
இணையதளம் மூலம் ஊடுருவி வடகொரியா கோடிக்கணக்கில் பணத்தை திருடி உள்ளதென ஐ.நா பாதுகாப்புச் சபையின் நிபுணர்கள் குழு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை சோதித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வடகொரியா 7 தடவை ஏவுகணை சோதனையை நடத்தி அயல்நாடுகளை அதிரவைத்தது.
சர்வதேச நாடுகளின் பொருளாதார தடை மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளின் எதிரொலியால் வடகொரியாவின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளபோதும், அந்த நாடு ஏவுகணை சோதனையில் கவனம் செலுத்துவது வியப்பாகவே உள்ளது.
இந்த நிலையில் வடகொரியா பல நாடுகளின் நிதிநிறுவனங்கள், கிரிப்டோகரன்சி (எண்ணிம நாணயங்கள்) பரிமாற்ற நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் மீது சைபர் தாக்குதல் நடத்தி கோடிக்கணக்கில் பணத்தை திருடி அதைக் கொண்டு ஏவுகணை மற்றும் அணு ஆயுத திட்டத்தை செயற்படுத்தி வருவதாக ஐ.நா. கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா பாதுகாப்புச் சபையின் நிபுணர்கள் குழு சமர்ப்பித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“வடகொரியாவைச் சேர்ந்த ஹக்கர்கள் 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கடந்த ஆண்டு நடுப்பகுதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 3 கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனங்களில் இருந்து 100 மில்லியன் வரை திருடியுள்ளனர்.
வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் நிதி நிறுவனங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனங்கள் வடகொரியாவில் குறிவைக்கப்படுகின்றன” எனக் கூறப்பட்டுள்ளது.