குற்றவாளிகளுடன் காவல்துறை நட்பு: சுட்டிக்காட்டிய வடக்கு ஆளுநர்
சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் காவல்துறையினருடன் நட்பாக இருப்பதால் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு மக்கள் அஞ்சுகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்(N. Vedanayagam) தெரிவித்துள்ளார்.
அத்துடன், இது ஆபத்தான நிலைமையை உருவாக்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி(Kilinochchi) கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் 15ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இன்று(16.03.2025) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
போர்ச் சூழல்
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், “ 2003ஆம் ஆண்டிலிருந்து இறுதிப்போர் வரையில் இந்த மாவட்டத்தில் மேலதிக மாவட்டச் செயலராகவும், மாவட்டச் செயலராகவும் பணியாற்றியிருக்கின்றேன்.
கடந்த போர்ச் சூழலிலும் கல்விக்கான வசதிகள் உள்ளிட்ட சகல சேவைகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன. வளங்கள் குறைவாக இருந்தாலும் மக்களின் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்தோம்.
இன்று வளங்களும், தொடர்பாடலும் பெருகிவிட்டாலும் மக்களுக்கான சேவைகள் என்பது அருகிவிட்டது.
அன்றைய எமது சேவைகளுக்கும் இன்றைய காலத்துச் சேவைகளுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.
அரசாங்கத் தொழில்கள்
இன்று பொதுமகன் அரச திணைக்களத்துக்குச் சென்றால் அரசாங்க அதிகாரிகள் பந்தடிப்பதுபோன்று அலைக்கழிக்கின்றனர். அல்லது இழுத்தடிக்கின்றனர்.
போர்க்காலத்தில் பணியாற்றியவர்கள் மக்களுக்குச் சேவை செய்யும் நோக்குடன் பணியாற்றினார்கள். இன்று அப்படியல்ல. கடந்த காலங்களில் அரசியலுக்காக ஒரு சில அரசாங்கத் தொழில்கள் உருவாக்கப்பட்டன.
தொழிலுக்காக சம்பளம் வழங்கவில்லை. சம்பளம் வழங்கவேண்டும் என்பதற்காக அரசாங்கத் தொழில்கள் உருவாக்கப்பட்டன.
மக்களுக்கான சேவை
இதனால் உருவாகிய அரசாங்க அதிகாரிகள் பலர் தங்கள் சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுக்கின்றார்கள் இல்லை.
ஏழையைக் கண்டால் உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் இயல்பாக மனதில் எழவேண்டும். அப்படிச் சிந்திப்பவர்கள் இன்று குறைவு.
ஏழைக்குச் செய்யும் சேவையும், பிரதிபலனை எதிர்பார்க்காமல் செய்யும் சேவையும்தான் மிகப்பெரிய சேவை.” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்