வெளிநாட்டு கப்பலுக்கு அனுமதி மறுப்பு: இலங்கை அரசாங்கம் அதிரடி
நோர்வே நாட்டு ஆய்வுக் கப்பலான டொக்டர் ப்ரிட்ஜோப் நான்சன் (Dr. Fridtjof Nansen) என்ற ஆய்வுக்கப்பலுக்கு இலங்கை விஜயம் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதை மையப்படுத்தி ஏற்பட்ட புவிசார் அரசியல் நெருக்கடி மற்றும் இராஜதந்திர அழுத்தங்கள் என்பவற்றின் அடிப்படையில் குறுகிய காலத்திற்கு ஆய்வுக் கப்பல்களுக்கு தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தடைக்காலத்தை மேற்கோள்காட்டியே நோர்வே ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடல்சார் ஆய்வு
டொக்டர் ப்ரிட்ஜோப் நான்சன் கப்பலானது நோர்வேயின் ஆராய்ச்சிக் கப்பலாகும். குறிப்பாக கடல்சார் ஆய்வுக் நடவடிக்கைகளில் சிறப்பு பணியாற்றியுள்ள இந்த கப்பலானது, பல்துறை ஆராய்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடலுக்கடியில் தானியக்க வாகனங்களைப் பயன்படுத்துவது உட்பட சிக்கலான, பல்துறை ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதில் டொக்டர் ப்ரிட்ஜோப் நான்சன் ஆய்வுக் கப்பல் முக்கியத்துவம் பெற்றதாகும்.
ஆபிரிக்கா, ஆசியா மற்றும் நோர்வே கடல் பரப்புகளில் பணியாற்றியுள்ள இந்த ஆய்வுக் கப்பல் இலங்கை விஜயத்திற்கு அனுமதி கோரியுள்ளது.
அநுரவின் நடவடிக்கை
எனினும் இலங்கை வருவதற்கு அனுமதி கோரும் உலக நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைக்காலத்தை மேற்கோள்காட்டி அனுமதி மறுக்கப்படுகின்றது.
இருப்பினும், இலங்கை கடற்பரப்புக்குள் வரும் உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.இந்த தடையை ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் விதித்திருந்தது.
ஆனால் உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்கள் இலங்கைக்கு வருவதால் ஏற்பட கூடிய இராஜதந்திர நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் பொதுவானதொரு மூலோபாய ஒத்துழைப்பு விதிமுறையை உருவாக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

