“ஊழல் மிக்க ஒருவருடன் கூட்டுச் சேர வாய்ப்பில்லை” ஜே.வி.பி ஆணித்தரம்
அமைச்சர் விமல் வீரவன்சவுடன் இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் செய்தியை மக்கள் விடுதலை முன்னணி மறுத்துள்ளது.
ஊழல் மிக்க ஒருவருடன், ஊழல் அற்ற எதிர்கால மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கம் எவ்வாறு பயணிக்கும் எனவும் அந்த கட்சியின் ஊடகப்பிரிவு கேள்வியெழுப்பியது.
கட்சிக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கையல்ல எனவும், தேசிய மட்டத்தில் கட்சிகளின் கடைநிலை ஆதரவாளர்கள் தம்முடன் இணைந்துகொள்ள முடியும் என்பதே தமது கொள்கையாகும் எனவும் மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது.
கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கும் மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட தலைவர் ஒருவருக்கும் இடையில் மிக இரகசியமான பேச்சுவார்த்தை ஒன்று அண்மையில் இடம்பெற்றதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த சந்திப்பு மிகவும் இரகசியமான இடத்தில் இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
இது குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப்பிரிவை ஐபிசி தமிழ் செய்திப் பிரிவு தொடர்புகொண்டு கேட்டபோது, ஊழல் மிக்க ஒருவருடன் கூட்டுச் சேர வாய்ப்பில்லை எனத் தெரிவித்தது.