மலேசியா செல்பவர்களுக்கு வெளியான அறிவிப்பு
சுற்றுலா விசாவில் மலேசியாவிற்கு
மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு நபர்கள் வேலை தேடுபவர்களிடம் பணம் வசூலிப்பதாகவும், மலேசியாவில் வேலைக்காக சுற்றுலா விசாவில் அனுப்பப்படுவதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
எந்தச் சூழ்நிலையிலும் மலேசியாவுக்கு சுற்றுலா விசாவில் பணி நிமித்தம் செல்லக் கூடாது என்றும், அந்நாட்டுச் சட்டப்படி, சுற்றுலா விசாவில் மலேசியாவிற்குள் நுழைந்த பிறகு அதை பணி விசாவாக மாற்ற முடியாது என்றும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
மலேசியாவில் வேலை வாய்ப்பு
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மலேசிய அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, மலேசியாவில் 10,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க மலேசிய அரசாங்கம் இணங்கியுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மலேசியாவின் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம் சரவணன் மற்றும் மலேசிய தொழிலாளர் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட விசேட இராஜதந்திரக் குழுவொன்று இம்மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் வேலைவாய்ப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
இது தொடர்பான ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பதிவுடன் இந்த 10,000 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப எதிர்பார்க்கப்படுவதாக பணியகம் தெரிவிக்கிறது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுற்றுலா விசாவில் மலேசியாவில் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும், அவ்வாறான மோசடி செய்பவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், அது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறும் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
