மின் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
மின்சார பாவனையாளர்களுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.
உங்களுக்கு தடையில்லா மின்சாரத்தை பெறவேண்டுமாயின் மீண்டும் அறிவிக்கும் வரை பின்வருவனவற்றை பின்பற்ற வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாலை 6 முதல் 10 வரை மின்னழுத்தி, மின்னடுப்பு, மின்சார ஹீட்டர்கள், சலவை இயந்திரம் மற்றும் காற்றுப்பதனாக்கி (எயர் கன்டிஷனர்) ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் உள்ளுராட்சி நிறுவனம் 80% மின் விளக்குகளை அணைக்க வேண்டும்.
வர்த்தக நிலையங்கள் மற்றும் அரச அலுவலகங்கள் அலுவலக நேரத்தின் பின்னர் அனைத்து மின் விளக்குகளையும் மாலை 2.30 முதல் 4.30 வரை அணையுங்கள். அனைத்து சந்தர்ப்பங்களிலும் தேவையற்ற மின் விளக்குகளை அணைத்திட வேண்டும்.
எல்லோரும் எந்நேரமும் காற்றுப் பதனாக்கியின் வெப்பநிலையை 26 செல்சியஸில் பராமரிக்கவும், விளம்பரப் பலகைகள் மற்றும் பெயர்பலகைகள் ஒளிரவிடப்படுவதை தவிர்க்கவும், உங்களிடம் ஜெனரேட்டர் காணப்படுமாயின் அதனை பயன்படுத்தி மாத்திரம் காற்றுப் பதனாக்கியை செயற்படுத்த வேண்டும்.
மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் 200 மெகாவொட் மின்சார திறன் நாளாந்தம் குறைக்கப்படுவதுடன், மின் தடைக்கான தேவையும் தவிர்க்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.