நுரைச்சோலை அனல் மின் நிலையம் தொடர்பில் மின்சார சபை விடுத்துள்ள அறிவித்தல்
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு சீன பொறியியலாளர்களின் சேவையை பெற்றுக்கொடுக்க தயார் என வெளியாகியுள்ள கடிதம் பொய்யானதும் அடிப்படை ஆதாரமற்றதும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நிதி நிலைமை, மின் உற்பத்தித் திட்டங்கள் மற்றும் அடுத்த 12 மாதங்களுக்கான முன்னறிவிப்புகள் தொடர்பான கலந்துரையாடலின் போதே மின்சார சபை மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
தற்போது உள்ள வெற்று பணியிடங்களுக்கு உள்ளூர் பொறியியலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது.
மின்சார கொள்வனவு
இந்நிலையில், அக்குழுவிலிருந்து தகுதியானவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சார சபை மேலும் வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், அடுத்த ஆண்டும் குறைந்த மழை பொழியும் ஆண்டாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், தேசிய மின்கட்டமைப்பிற்கு தனியாரிடம் இருந்து குறைந்த விலையில் மின்சாரத்தை வாங்க சபை முடிவு செய்துள்ளது.
அத்துடன், மே 2024 க்குள் 40 நிலக்கரி படகுகள் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, இந்நிலைப்பாடானது நிலக்கரி கொள்முதலில் முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.