19 நாடுகளில் 3,500 வீரர்கள் - இந்தியா உருவாக்கிய புதிய வளையம்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று(21) இந்திய கடற்படை யோகா வளையத்தை(Ocean Ring of Yoga) உருவாக்கியுள்ளது.
19 கப்பல்களை பல்வேறு நட்பு நாடுகளின் துறைமுகங்களுக்கு அனுப்பி இந்திய கடற்படை யோகா வளையத்தை உருவாக்கியிருக்கிறது.
Ocean Ring of Yoga என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, 19 இந்திய கடற்படைக் கப்பல்களில் ஏறக்குறைய 3,500 கடற்படை வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச கடல்களில் யோகாவின் தூதுவர்களாக 35,000 கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணம் செய்துள்ளதாக கடற்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு துறைமுகங்கள் அல்லது சர்வதேச கடல் பகுதியில் 11 கடற்படைக் கப்பல்களில் பணிபுரியும் 2,400 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இதில் அடங்குவர்.
பல நாடுகளைச் சேர்ந்த 1,200 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கடற்படை வீரர்களும் இந்த யோகா தின கொண்டாட்டத்தில் இந்தியக் கடற்படையுடன் இணைகின்றனர்.
இந்த ஆண்டு யோகா தின கருப்பொருளான "வசுதைவ குடும்பம்" என்ற செய்தியை பரப்பும் விதமாக இந்த நகர்வு இடம்பெறுகிறது.
இந்தியக் கடற்படையின் கப்பல்கள் செல்லும் பெரும்பாலான வெளிநாட்டு துறைமுகங்களில் யோகா தின நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கப்பல்கள் பயணித்த நட்பு நாடுகள்
வங்கதேசத்தில் சட்டோகிராம், எகிப்தில் சஃபாகா, இந்தோனேசியாவின் ஜகார்த்தா, மொம்பாசா, கென்யாவில் உள்ள டோமாசினா, ஓமானில் மஸ்கட், இலங்கையில் கொழும்பு, தாய்லாந்தில் ஃபூகெட் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஆகிய இடங்களில் உள்ள துறைமுகங்களுக்கு இந்தியக் கடற்படை கப்பல்கள் செல்லும்.
கில்டன், சென்னை, ஷிவாலிக், சுனைனா, திரிசூல், தர்காஷ், வாகிர், சுமித்ரா மற்றும் பிரம்மபுத்ரா ஆகிய இடங்களுக்கு கப்பல்கள் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21ஆம் திகதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது.
அதன்படி, முதல் முறையாக ஜூன் 21, 2015 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டமை நினைவூட்டத்தக்கது.