நியூசிலாந்தின் தலைவிதி இலங்கை அணியின் கையில்..! பரபரப்பின் உச்சத்தில் இன்றைய போட்டி
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் இறுதி அணி எது என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இதுவரை 40 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இங்கிலாந்து, பங்களாதேஷ், இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.
அரையிறுதிச் சுற்று
அந்த வகையில் அரையிறுதிச் சுற்றுக்கு தெரிவுசெய்யப்படும் இறுதி அணிக்கான போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த மூன்று அணிகளும் தலா 8 போட்டிகளில் விளையாடி தலா 4 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளன.
மூன்று அணிகளும் எட்டு புள்ளிகளைப் பெற்றுள்ள போதிலும் நிகர ஓட்ட சராசரியின்(run rate) பிரகாரம் நியூசிலாந்து நான்காம் இடத்தையும் பாகிஸ்தான் ஐந்தாம் இடத்தையும் ஆப்கானிஸ்தான் ஆறாம் இடத்தையும் பெற்றுள்ளன.
இதன் பிரகாரம் இந்த மூன்று அணிகளும் இறுதி நொக் அவுட் சுற்றின் போட்டியில் விளையாடவுள்ளதுடன், அந்தப் போட்டிகள் மூன்று அணிகளுக்கும் முக்கியத்துவமானதாக மாறியுள்ளன.
இறுதி அணிக்கான போட்டி
அந்த வகையில் இன்று(9) இலங்கை அணியை நியூசிலாந்து எதிர்கொள்ளவுள்ளது. எதிர்வரும் 11 ஆம் திகதி தென்னாபிரிக்க அணியை ஆப்கானிஸ்தானும் இங்கிலாந்து அணியை பாகிஸ்தானும் எதிர்கொள்ளவுள்ளன.
இன்றைய போட்டியில் இலங்கை அணியை நியூசிலாந்து வெற்றிகொள்ளும் பட்சத்தில் நான்காவது அணியாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெரும்பாலும் உறுதி செய்யும் என கிரிக்கெட் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
மறுபுறம் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர் அணிகளை கணிசமான ஓட்டங்கள் அல்லது விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிகொள்ளும் பட்சத்தில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
