இந்தியாவை உலுக்கிய கோர விபத்து - நடந்தது என்ன..!
ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி கோரமண்டல் அதிகவேக தொடருந்து சென்றுகொண்டிருந்தது. அதேபோல், பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் அதிகவேக தொடருந்து சென்றுகொண்டிருந்தது.
பெங்களூரு-ஹவுரா தொடருந்து நேற்று இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பகனகா பஜார் தொடருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் தொடருந்தின் சில பெட்டிகள் தடம் புரண்டன.
தடம் புரண்ட தொடருந்தின் சில பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தன. அந்த தண்டவாளத்தில் கோரமண்டல் அதிவேக தொடருந்து வேகமாக வந்துகொண்டிருந்தது.
வேகமாக மோதிய தொடருந்து
இதனால், தடம்புரண்ட பெங்களூரு-ஹவுரா தொடருந்து பெட்டிகள் மீது சென்னை அதிவேக தொடருந்து அதிவேகமாக மோதியது.
இதன் காரணமாகவே குறித்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த கோர விபத்தில் மொத்தம் 280 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மீட்புப்பணிகள்
விபத்து குறித்து தகவலறிந்த உடன் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று இரவு 7 மணிக்கு விபத்து நடைபெற்ற நிலையில் தொடர்ந்து இன்றும் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
