புகையிரத விபத்தில் பலி எண்ணிக்கை 200 ஐ தாண்டியது 900 பேர் படுகாயம்(இரண்டாம் இணைப்பு)
ஒடிசா புகையிரத விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளதுடன் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
காயமடைந்தவர்கள் கோபால்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஒடிசா மாநில தலைமைச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
மூன்று புகையிரதங்கள் மோதி விபத்து - பலி எண்ணிக்கை அதிகரிப்பு( முதலாம் இணைப்பு)
ஒடிசாவில் மூன்று புகையிரதங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளதுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை வந்த புகையிரதம் கோரவிபத்து -பலர் பலி, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்
சென்னை வந்த புகையிரதம் மற்றொரு புகையிரதத்துடன் நேருக்குநேர் மோதி ஏற்பட்ட விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்ததுடன் 179 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு புகையிரதம் யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு புகையிரதம் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விரைவு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதல்
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா புகையிரத நிலையம் அருகே ஏற்பட்ட இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம் புரண்டன. சம்பவத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 60க்கும் மேற்பட்ட அம்புலன்ஸ்களில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அங்குள்ள பேருந்துகளிலும் காயமடைந்தவர்கள் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு வருகின்றனர்.
இதுவரையான சேத விபரம்
வனப்பகுதி என்பதாலும், இரவு நேரம் என்பதாலும், மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் புகையிரத விபத்தால் இதுவரை 179 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சுமார் 50 பேர் வரை உயிரிழந்திருக்கக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
