கண்டியில் தாடியுடன் காவல்துறை சீருடையில் நின்ற அதிகாரிக்கு நேர்ந்த கதி..!
திருமணத்திற்கு முந்தைய ஒளிப்படங்களை (Pre-shoot) எடுப்பதற்காக காவல்துறை சீருடையில் தாடியுடன் கண்டி நகரில் காத்திருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலங்கம காவல் நிலையத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
முகம் முழுவதும் தாடியுடன் காவல் போக்குவரத்துப் பிரிவு சீருடையில் ஒருவர் கண்டி, யட்டிநுவர வீதி மற்றும் கொழும்பு வீதி சந்திப்புக்கு அருகில் நிற்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, கண்டி தலைமையக காவல்துறையினர் அங்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பிணையில் செல்ல அனுமதி
இதன்போது, அவர் காவல்துறை உத்தியோகத்தர் என்பது தெரியவந்துள்ளது.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள தனது திருமணத்தை முன்னிட்டு இந்து மத சம்பிரதாயத்தின்படி தாடி வளர்த்துள்ளதாகவும், தனது காதலியுடன் திருமணத்திற்கு முந்தைய ஒளிப்படங்களை எடுப்பதற்காக அங்கு காத்திருந்ததாகவும் அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்து மத சம்பிரதாயத்தின்படி திருமணத்தில் தாடியுடன் பங்கேற்பதற்கு காவல்துறை மா அதிபரிடம் அனுமதி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் முகம் முழுவதும் தாடி வளர்ப்பதற்கு அனுமதி கிடையாது என காவல்துறை ஊடகப் பேச்சாளரும் உதவி காவல்துறை அத்தியட்சகருமான உதயகுமார வுட்லர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் குறித்த உத்தியோகத்தர் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |