சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி வீடு திரும்பிய மாணவி விபத்தில் படுகாயம்
பலாங்கொடை - வெலிகேபொல வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தொன்றினால் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்றினுள் டிப்பர் ரக வாகனத்தில் ஏற்றிச்சென்ற இரும்பு கம்பிகள் வீசப்பட்டமையினாலேயே நேற்றையதினம் (11) இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தினால் பேருந்தில் பயணித்த மாணவி ஒருவர் கழுத்து மற்றும் முகத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக சிகிச்சை
இதேவேளை, அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி மாகாண வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இம்புலாமுர பிரதேசத்தில் இருந்து பலாங்கொடை நகருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தும் பலாங்கொடையில் இருந்து வெலிகேபொல நோக்கி சென்று கொண்டிருந்த இரும்பு குழாய்களுடன் கூடிய டிப்பர் ரக வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
இந்த நிலையில், டிப்பர் சாரதி கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதாலும், ஆபத்தான முறையில் பொருட்களை ஏற்றிச் சென்றதாலும் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, விபத்து தொடர்பில் பேருந்து மற்றும் டிப்பர் வாகனத்தின் சாரதிகள் இருவர் பலாங்கொடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |