பெரும் அச்சுறுத்தலாக மாறிவரும் ஒமைக்ரோன்!! ஆனால் இலங்கையின் நிலை?
ஒமைக்ரோன் வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அகில இலங்கை தாதியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த காலங்களில் அரசாங்கம் எடுத்த தீர்மானங்களால் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தததை சுட்டிக்காட்டிய சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய (Saman Ratnapriya), இனியும் அவ்வாறான நிலைமை ஏற்பட அனுமதிக்க முடியாது எனவும் நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கூறியுள்ளார்.
குறித்த ஊடகசந்திப்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
"ஒமைக்ரோன் பிறழ்வே உலகுக்கு தற்போது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இங்கிலாந்தில் நாளாந்தம் 70 பேர் வரை ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
இலங்கைக்கும் அச்சுறுத்தல் உள்ளது. இதுவரை நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து வந்த ஒருவருக்கும் ஒமைக்ரோன் உறுதியாகியுள்ளது. அவர் டிசம்பர் 9 ஆம் திகதி இலங்கை வந்து 11 ஆம் திகதிவரை இருந்துள்ளார். டிசம்பர் 9, 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் கொழும்பில் சூதாட்டம் விளையாடியுள்ளார். அந்தச் சூதாட்ட நிலையத்துக்கு வந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. இவ்வாறு செயற்பட்டால் எப்படி ஒமைக்ரோன் பிறழ்வு இலங்கையில் பரவுவதைத் தடுக்க முடியும்?
அவர் வந்த விமானத்தில் இருந்த விமான ஊழியர்கள் மற்றும் விமான நிலையத்துக்குள் தீர்வையற்ற கடைகளில் இருந்தவர்கள் எனப் பலரும் அவரால் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளனர். இவை தொடர்பில் உரிய வகையில் தேடுதல் நடத்தாவிட்டால் எப்படி நிலைமையைக் கட்டுப்படுத்துவது? இது சுகாதார அமைச்சுக்கு விளங்காதது ஏன்?
நைஜிரியாவுக்கு சென்றுவந்த நிலையில் ஒமைக்ரோன் தொற்றிய தனியார் பல்கலைக்கழக பேராசிரியர் ஒரு தடுப்பூசிகூட பெறவில்லை. அவ்வாறு பெறாதவர் எப்படி வெளிநாடு சென்றிருக்க முடியும்?
எமது நாடு ஒரு தீவு. இங்கு வைரஸ் பரவுவதை தடுக்கலாம். 2ஆவது அலை கூட தவறான அரசியல் தீர்மானத்தால் தான் ஏற்பட்டது. இன்று பிசிஆர் பரிசோதனை உரிய வகையில் மேற்கொள்ளப்படுவதில்லை. உண்மையான தரவுகளும் வெளிப்படுத்தப்படுவதில்லை.
எவ்வித திட்டமிடல்களும் இன்றி, போலியான தகவல்களை மையப்படுத்தியே தற்போத நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன" எனக் கூறியுள்ளார்.