குழந்தைகளை பெரிதும் பாதிக்கும் ஒமைக்ரோன்! அச்சத்தில் உறைந்துள்ள சீனாவும் அமெரிக்காவும் - வெளியான அதிர்ச்சித் தகவல்
அமெரிக்காவில் கொரோனா மற்றும் ஒமைக்ரோன் (Omicron) தொற்றால் பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனாவை தொடர்ந்து தற்போது ஒமைக்ரோன் (Omicron) பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் ஒமைக்ரோன் (Omicron) தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 90 ஆயிரமாக உள்ளது.
இதைத் தொடர்ந்து நடத்தப்படும் சோதனையில் பலருக்கு ஒமைக்ரோன் (Omicron) பாதிப்பு உறுதியாகி வருகிறது.
கொரோனா மற்றும் ஒமைக்ரோன் (Omicron) தொற்றால் பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அங்குள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே உள்ளது.
கடந்த டிசம்பர் 5ஆம் திகதி முதல் தற்போது வரை 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் தொற்றால் பாதிக்கப்படுவது 4 மடங்காக அதிகரித்து காணப்படுகிறது.
இது தொடர்பில் நியூயோர்க் சுகாதாரத்துறை அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில்,
அமெரிக்காவில் கொரோனா மற்றும் ஒமைக்ரோன் (Omicron) தொற்றால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் வைத்தியசாலைகளிலும் குழந்தைகள் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். அமெரிக்காவில் 12 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை சுகாதாரத்துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது. தொற்றில் இருந்து குழந்தைகளை காக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சீனாவிலும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. முதன் முறையாக சீனாவில் தான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியது.
ஆனால் 3 மாதங்களில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நீண்ட காலத்துக்கு பிறகு அங்கு மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
அங்கு தினசரி பாதிப்பு 158 ஆக உள்ளது.
அங்குள்ள ஜியான் நகரில் 1.3 கோடி மக்கள் வசித்து வருகிறார்கள். அந்த நகரில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. மேலும் ஒமைக்ரோன் (Omicron) பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ஜியான் நகரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.