யாழில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி தொடரும் போராட்டம்!
யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் பலாலி சந்தியில் இன்றைய தினம் (26) ஆறாவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள், வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பலாலி காவல்துறையினர்
இதேவேளை கடந்த வாரங்களில் போராட்டக்காரர்கள் பயன்படுத்திய பலாலி பொது நோக்கு மண்டபத்தில் காணப்பட்ட வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம் என்பவற்றை பலாலி காவல்துறையினர் அவ்விடத்தில் இருந்து எடுத்து சென்று காவல் நிலையத்தில் வைத்திருக்கின்றனர்.

இதனால் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குடிநீர் மற்றும் மலசல கூடங்கள் இன்றி பல்வேறு இன்னல்களையும் அனுபவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தற்காலிக கொட்டகை அமைக்கவும், தரப்பாள் கட்ட இரண்டு தடிகளை நாட்ட கூட காவல்துறையினர் அனுமதிக்காததால், கைகளினால் தரப்பாளை பிடித்தவாறு வெயிலுக்கு மத்தியில் முதியவர்கள் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்றைய போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


