பொதுமக்களை மிரட்டிய காவல்துறை அதிகாரி...! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
கடமைக்கு ஒவ்வாத வகையில் நடந்து கொண்டதுடன் பொதுமக்களிடம் அச்சுறுத்தும் தொனியில் தர்க்கத்தில் ஈடுபட்டமைக்காக உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விடயத்தை காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
வதுபிட்டிவல முதலீட்டு மண்டல காவல்துறை சாவடியில் கடமையாற்றி வந்த உப காவல்துறை பரிசோதகர் ஒருவரே இவ்வாறு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
சீர்கேடான நடவடிக்கை
இது தொடர்பில் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இலங்கை காவல்துறை விளக்கமளித்துள்ளது.
மேலும் தெரிவித்துள்ள காவல்துறை, “கடந்த 2026 ஜூலை 23 ஆம் திகதி காலை 10:45 மணியளவில் வதுபிட்டிவல வைத்தியசாலைக்கு அருகில் உள்ள தனியார் நிறுவனமொன்றிற்கு முன்னால் சீருடையில் நின்றவாறு கடமைக்கு ஒவ்வாத வகையில் நடந்துகொண்டுள்ளார்.

அத்துடன் பொதுமக்களிடம் அச்சுறுத்தும் வகையிலான வார்த்தைகளைப் பயன்படுத்தித் தர்க்கத்திலும் ஈடுபட்டுள்ளார்.
குறித்த அதிகாரியின் இத்தகைய சீர்கேடான நடவடிக்கை தொடர்பாகக் கவனம் செலுத்தியுள்ள காவல்துறை உயர் அதிகாரிகள், அவருக்கு எதிராக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்தச் பணி இடைநிறுத்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
தவறான நடவடிக்கை
குறித்த அதிகாரியின் இத்தகைய தவறான நடவடிக்கை இலங்கை காவல்துறை சேவைக்கும் முழுமையான அரச சேவைக்கும் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
இது ஏனைய அதிகாரிகளுக்கும் தவறான முன்னுதாரணமாக அமைவதுடன் அவரை மேலும் சேவையில் வைத்திருப்பது காவல்துறை சேவையின் கீர்த்திநாமத்திற்கும் பெருமைக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதால், நிறுவன விதிக் கோவையின் பிரிவுகளுக்கு அமைவாக அவர் உடனடியாகப் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
பொதுமக்களின் நம்பிக்கையையும் மரியாதையையும் பெற்ற ஒழுக்கமான காவல்துறை சேவையைப் பேணுவதே தங்களது முதன்மை நோக்கம்” என தெரிவித்துள்ளது.
மேலும், சட்டம் மற்றும் ஒழுக்கத்தைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளின் இத்தகைய நாகரிகமற்ற அல்லது பொருத்தமற்ற நடத்தைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காக நீதியின் பக்கம் நிற்க இலங்கை காவல்துறை சேவை கடமைப்பட்டுள்ளது எனவும் இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |