பாரிய அழிவை சந்திக்க நேரிடும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை (காணொளி)
இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றின் அச்சுறுத்தல் காணப்படுவதனால் நாடு பாரிய அழிவை சந்திக்க நேரிடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
இவ்வாறான சூழலில் சுகாதார அமைச்சர் தளர்வுகளுடன் கூடிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டமைக்கு அச்சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹண( Upul Rohana) அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
''இலங்கையில் ஒமிக்ரோன் திரிவுடன் நால்வர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறான சூழலில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா சுகாதார வழிமுறைகள் தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டுள்ளன.
பண்டிகைக்காலத்தில் கொரோனா நெருக்கடியை தடுக்கும் வகையில், மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடைக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் முன்னதாக அழைப்பு விடுத்திருந்தனர். எனினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை நடைமுறைப்படுத்தபடவில்லை.
புதிய சுகாதார வழி முறைகளின் அடிப்படையில், திருமண நிகழ்வுகளில் மண்டப கொள்ளளவில் 50 சதவீதமானோர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒமைக்ரோன் தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்ட போதிலும் மக்கள் பண்டிகைக்காலத்தில் எந்தவொரு சுகாதார வழிகாட்டுதல்களும் இன்றி செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனால் நாடு பாரிய ஆபத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர், பயணக் கட்டுப்பாடுகள், மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களை தளர்த்துவது நியாயமான செயற்பாடா என கேள்வி எழுப்பியுள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மற்றும் சுகாதார அதிகாரிகள் கொரோனா தொற்று நோய் தொடர்பான தரவுகளின் அடிப்படையில் இந்த தளர்வை செய்துள்ளனரா அல்லது வேறு யாருடைய அழுத்தங்கள் காரணமாக செய்துள்ளனரா? என அவர் வினவியுள்ளார்.