தந்தையை இரும்பு ஒன்றால் தாக்கி கொலை செய்த மகன் !
இராகலையில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டெல்மார் தோட்டத்தில் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து இரும்பு ஒன்றால் தலையில் தாக்கிக் குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபரின் சடலத்தை இராகலை காவல்துறையினர் இன்று (05) காலை மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்றிரவு தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதால் மகன் தந்தையை இரும்பு ஒன்றால் தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான தந்தையின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதையடுத்து அதிக இரத்தப்போக்கு காரணமாக வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் இராகலை டெல்மார் மேல் பிரிவைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சுப்பிரமணியம் செல்வநாயகம் (62 வயது) என தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த நீதவானின் விசாரணைக்குப் பின் சடலத்தை சட்டவைத்திய அதிகாரி ஊடாக பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த நுவரெலியா மாவட்ட வைத்திய சாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மகனை கைது செய்துள்ள இராகலைப் காவல்துறையினர் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டுள்ள நிலையில் இராகலை காவல் நிலையத்தில் பல முறைப்பாடுகள் பதியப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
