தென்னிலங்கையில் கோரம்! மனைவியின் கண்முன்னே படுகொலை செய்யப்பட்ட கணவர்
வத்தளை, ஹேகித்தை, அல்விஸ்வத்தை பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொலை சம்பவம் நேற்று (19.07.2025) இரவு இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முகமூடி அணிந்த நான்கு பேர் முச்சக்கர வண்டியில் பிரவேசித்து குறித்த நபரின் வீட்டிற்குள் நுழைந்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவரை கொலை செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கொலை இடம்பெற்ற போது உயிரிழந்தவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் வீட்டில் இருந்துள்ளனர்.
உயிரிழந்தவர் கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 43 வயதானவர் என்பதுடன், சில மாதங்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்தவர், 2023 ஆம் ஆண்டு மஹாபாகே பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவியவர் என காவல்துறையினரால் நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக எந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், வத்தளை காவல்துறையினரும் களனி பிரிவு குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகளும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மனைவி வாக்குமூலம்
இதேவேளை, கொலைச் சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்ட நபரின் மனைவி வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.
குறித்த சம்பவத்தின் போது அங்கு மூன்று நபர்களைக் அந்தப் பெண் கண்டதாகவும் அதில் ஒருவர் கணவரைக் கொடூரமாக தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முற்பகை காரணமாக கொலைச்சம்பவம் இடம்பெற்றதாகவும் தாக்குதல் மேற்கொண்டவர்கள் குறித்து தகவல்கள் எதுவும் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
