உன்னை கொன்று விடுவேன்- கோடீஸ்வர வர்த்தகரை மிரட்டிய மனைவி - வெளிவரும் பகீர் தகவல்கள்
கோடீஸ்வர வர்த்தகரான ஒனேஷ் சுபசிங்கவின் மனைவியான பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண், அவர் கொல்லப்படுவதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஒனேஷ் சுபசிங்கவுக்கும் அவரது மனைவியான பிரேசில் நாட்டுப் பெண்ணுக்கும் வீட்டில் சொத்து தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், “உன்னை கொன்றுவிடுவேன்” என்று பல சந்தர்ப்பங்களில் மனைவி மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்த பகீர் தகவல்
குறித்த வீட்டில் பணிபுரியும் ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளதுடன் சந்தேக நபரின் நண்பி என கூறப்படும் மற்றைய சந்தேக நபர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இந்த வீட்டிற்கு வந்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வர்த்தகர் தனது மனைவி, மகள் மற்றும் மனைவியின் நண்பியுடன் கடந்த 19ஆம் திகதி இந்தோனேஷியா சென்றதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் உண்மைகளை அறிக்கை செய்துள்ளது. சுபசிங்கவின் கொலையின் பின்னர் அவரது மனைவியும் மகளும் பிரேசில் நாட்டு நண்பியுடன் அந்த நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியா,பிரேசிலுக்கு பயணம்
கொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும், சம்பவத்தின் பின்னர் தப்பியோடிய மனைவி மற்றும் அவரது நண்பியைத் தேடுவதற்காகவும் விசேட இரகசிய காவல்துறை குழுவொன்று இந்தோனேசியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்குச் செல்லவுள்ளது.
சுபசிங்கவின் பிரேசிலைச் சேர்ந்த மனைவியின் தோழி மாஃபியா கும்பல் ஒன்றின் தீவிர உறுப்பினர் என தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொல்லப்பட்ட சுபசிங்க இலங்கையில் முப்பத்திரண்டு வர்த்தக நிறுவனங்களை வைத்திருக்கும் கோடீஸ்வர வர்த்தகர் ஆவார்.
