சர்ச்சைக்குரிய நிகழ்நிலை காப்பு சட்டமூலம்: மார்ச் 12 இயக்கம் கண்டனம்
இலங்கை மக்களின் குரலை நசுக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மார்ச் 12 இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை, அதன் பிடிவாத போக்கை எடுத்துக் காட்டுவதாக அந்த இயக்கம் கவலை வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய நிகழ்நிலை காப்பு சட்டமூலம் பொது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதாக மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது.
சட்டமூலம்
அதேநேரம், அரசியலமைப்பின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமைகளை மீறும் வகையில் குறித்த சட்டமூலம் அமைந்திருப்பதாக அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனநாயகமற்ற குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்த நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஒழுக்கக்கேடனானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன்பாக உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென அரசியல் கட்சிகளும் குடிசார் அமைப்புக்களும் தொடர்ந்து கோரியிருந்தன.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
எனினும், நீதிமன்றத்தின் பரிந்துரைகளை பொருட்படுத்தாது தயாரிக்கப்பட்ட குறித்த சட்டமூலத்தின் வரைவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகள் நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் உறுதிப்படுத்த வேண்டுமென மார்ச் 12 இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தையும் நடைமுறைப்படுத்தி மக்களின் கருத்து சுதந்திரத்தை அடக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அந்த இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |