இலங்கையின் ஆபத்தான சட்டங்கள்! எச்சரிக்கும் சந்திரிக்கா
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் என்பன மிகவும் ஆபத்தான விதத்தில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்றன என முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
“நாடாளுமன்றத்தில் காணப்படுகின்ற இரண்டு சட்ட மூலங்கள் குறித்து நாட்டில் பெரும் கரிசனைகள் காணப்படுகின்றன. முதலாவது நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் மற்றையது பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்.
கையெழுத்திட்ட சபாநாயகர்
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டுள்ளார் என நான் நினைக்கின்றேன்.
இவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதால், கலந்துரையாடப்பட்டுள்ளதால் மற்றும் வீதிகளில் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளதால் இந்த சட்டமூலங்கள் குறித்து நான் தெளிவுபடுத்தப்போவதில்லை.
ஒரு சிரேஸ்ட பிரஜை என்ற அடிப்படையில் எனது கருத்து என்னவென்றால் இரண்டும் மிகவும் பாரதூரமானவை ஆபத்தானவை. இவை மிகவும் ஆபத்தான விதத்தில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்றன.
மக்களை துன்புறுத்துவதற்கான அதிகாரம்
இந்த சட்டமூலங்கள் ஜனநாயக வழியில் செயற்படும் மக்களை துன்புறுத்துவதற்கான தேவைக்கு அதிகமான அதிகாரங்களை அரசாங்கத்திற்கு வழங்குகின்றன.
ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி அரசாங்கத்தை விமர்சிக்கின்ற மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கின்ற மக்களை துன்புறுத்துவதற்கான அதிகாரங்களை இந்த சட்டமூலங்கள் அரசாங்கத்திற்கு வழங்குகின்றன.
இந்த சட்டமூலங்களை விலக்கிக்கொள்ளுங்கள் என அரசாங்கத்திற்கு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |