கந்தளாய் குளத்தில் 10 வான் கதவுகள் திறப்பு - கிழக்கில் தொடரும் பாதிப்பு
கந்தளாய் குளத்தில் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கந்தளாய் குளத்தில் தேங்கும் நீரைக் கட்டுப்படுத்த, கந்தளாய் குளத்தின் இரண்டு வான் கதவுகளை மூன்று அடிக்கும், எட்டு வான் கதவுகள இரண்டு அடிக்கும் திறக்க கந்தளாய் பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் இன்று நடவடிக்கை எடுத்தார்.
தற்போதுள்ள குளத்தின் நீர் மட்டத்தைக் குறைப்பதற்கும், குளத்தின் கீழ் பயிரிடப்படும் நெல் வயல்களில் வெள்ளம் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொறியாளர் தெரிவித்துள்ளார்.
செய்தி - தொம்ஸன்
திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தில் 5433 குடும்பங்களைச்சேர்ந்த 16063 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
110 வீடுகள் சேதம். காலை 11.00 மணி அளவில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் நடைபெற்றுவரும் அசாதரண காலநிலை காரணமாக 5433 குடும்பங்களைச்சேர்ந்த 16063 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார தெரிவித்தார்.
அதில் 4999 குடும்பங்களைச்சேர்ந்த 14683 நபர்கள் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்திருப்பதுடன் குறிப்பாக 241 குடும்பங்களைச்சேர்ந்த 668 நபர்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குளங்களது நீர்மட்டம் படிப்படியாக உயர்வதால் வான்கதவுகளை திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கரையோரப் பகுதிகளில் வாளும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்குச் செல்லுமாறும் அறிவுருத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தம்பலகாமம் ஊத்த வாய்க்கால்
நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலையின் காரணமாகும் திட்வா புயல் காரணமாகவும் முள்ளிப்பொத்தானை தம்பலகாமம் பிரதேச வயல் நிலப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று (28) தம்பலகாமம் ஊத்த வாய்க்கால் உடைப்பெடுத்துள்ளதால் தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியால் வெள்ள நீர் ஊடறுத்துப் பாய்கிறது.
குறித்த ஊத்தை வாய்க்கால் உடைப்பெடுத்ததால் அதனை சூழவுள்ள வயல் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளது.

செய்தி - ரொஷான்
