மன்னார் நகர சபை அமர்வில் மீண்டும் அமளி துமளி!
மன்னார் நகர சபையின் (Mannar UC) ஒத்திவைக்கப்பட்ட அமர்வின் போது நகர சபையின் முன்னாள் முதல்வரும், தற்போதைய முதல்வரும் நாவடக்கம் இன்றி மோதிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய தினம் (17) இடம்பெற்ற ஒத்திவைக்கப்பட்ட அமர்வின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் நகர சபையின் முன்னாள் முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் ஆகியோருக்கு இடையில் சபை அமர்வின் போது இவ்வாறு முரண்பாடு ஏற்பட்டது.
மீண்டும் கூட்டப்பட்ட சபை
இது குறித்து மேலும் தெரியவருகையில், ”மன்னார் நகர சபையின் கன்னி அமர்வு கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது சபையில் தொடர்ந்தும் உறுப்பினர்களுக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு வந்த நிலையில் சபை முதல்வரினால் சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த அமர்வின் தொடர்ச்சியாக இன்றைய தினம் (17) காலை 9.30 மணிக்கு சபை முதல்வரினால் மீண்டும் சபை கூட்டப்பட்ட போது அனைத்து உறுப்பினர்களும் பங்கு பற்றி இருந்தனர்.
குற்றச்சாட்டு முன்வைப்பு
இந்தநிலையில் மன்னார் நகர சபையின் முன்னாள் முதல்வர், தற்போதைய நகர சபையின் உறுப்பினருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் ஆகியோருக்கு இடையில் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடு ஏற்பட்டு வாய்த்தர்க்கமாக மாறியது.
குறித்த இருவரும் நா அடக்கம் இன்றி மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை புதிய செயலாளருக்கு காசோலையில் ஒப்பமிடுதல், மக்களினால் தீர்மானிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதி, ஒப்பந்த அடிப்படை மற்றும் நிரந்தரமாக கடமையாற்றுகின்ற ஊழியர்களின் சம்பளம் வழங்குதல் ஆகியவற்றுக்கான அனுமதி கோரப்பட்ட நிலையில் சபையினால் அனுமதி வழங்கப்பட்டு சபை அமர்வு முடிவடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

