மாற்று வழியைத் தேடப் போய் மொட்டுக் கட்சியிடம் மக்கள் சிக்கிவிட்டனர் - சஜித் குற்றச்சாட்டு
அலங்காரத்திற்கு மாற்று வழியை தேட போய் மொட்டுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கியதன் ஊடாக நாட்டுக்கு நேர்ந்த கதியை படிப்பினையாக எடுத்துக்கொள்ளுமாறும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
வெறும் வாய் வார்த்தைகளினால் நாட்டை ஆள முடியாது என்பதை மக்கள் தற்போது புரிந்துகொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிலியந்தலை - பொகுந்தர சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு அத்தியாவசியமான முச்சக்கர வண்டியை கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் பாரதூரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அழகிய வாய் வார்த்தைகளால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின் செய்ய போகும் திட்டங்களை ஆட்சி அதிகாரமின்றி ஐக்கிய மக்கள் சக்தி செய்து காட்டியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவிற்கு அமைவாக, “ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு” வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
உயிரை பாதுகாக்க மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் பராமரிப்புக்காகவும், மக்களுக்கு சுகாதார நிவாரணம் வழங்குவதற்காகவும், பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் "ஜன சுவய" கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு 'எதிர்க்கட்சியின் மூச்சு" நிகழ்ச்சித் திட்டத்தை நாடளாவிய ரீதியாக நடைமுறைப்படுத்துகின்றனர்.






