22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை எதிர்த்து ஒன்றிணைந்துள்ள முக்கிய அமைப்புகள்!
முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை எதிர்த்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உடன் இணைந்து 40 தொழில்சார் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள்,கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நேற்று BASL இல் நடந்த கூட்டத்தை தொடர்ந்து கூட்டு அறிக்கை ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்கும் இந்த திருத்தம் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு நேரடி அச்சுறுத்தலாக அமையும் என BASL முன்வைத்த நிலைப்பாட்டுக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கலந்துரையாடப்பட்டுள்ள விடயங்கள்
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA), அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA), புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம், தரப்படுத்தப்பட்ட அதிபர்கள் சங்கம், அரச தாதியர் சங்கம் உள்ளிட்ட சுகாதார மற்றும் அரச ஊழியர் சங்கங்கள் பல இதில் அடங்கும்.

அறிக்கையின் முக்கிய கருத்துகள்
- உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் உட்பட நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பது நீதித்துறை சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் மற்றும் மக்களின் இறையாண்மையை பாதிக்கும்.
- 2022 இல் உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்ற விசேட தீர்மானத்தை சுட்டிக்காட்டினர். அதில், பதவியில் உள்ள நீதிபதிகளின் ஓய்வு வயதை பாதிக்கும் அரசியலமைப்பு திருத்தம் நீதித்துறை சுதந்திரத்தை மீறுவதாகவும், அரசியலமைப்பின் 3ஆவது சரத்தை மீறுவதாகவும், எனவே அது பொது வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
பொது வாக்கெடுப்புக்கு வலியுறுத்து
இதன்படி, 40 அமைப்புகளும் ஒருமனதாக அரசாங்கம் இந்த திருத்த சட்டமூலத்தை உடனடியாக மீளப் பெற வேண்டும் எனவும், அதற்கு பதிலாக உயர் நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டன.

மேலும், அரசு இந்த திருத்தத்தை முன்னெடுக்க விரும்பினால், அதனை நேரடியாக மக்களிடம் பொது வாக்கெடுப்புக்கு விட வேண்டும் எனவும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, நீதித்துறை சுதந்திரத்தை பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் எதிர்பதாகவும், சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் மற்றும் மக்களின் இறையாண்மையை பாதுகாக்க தாங்கள் உறுதிபூண்டுள்ளதாகவும் BASL தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |