சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்புவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சாந்தன் நேற்று(28) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை
இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதி நோயாளர் காவு வண்டி மூலம் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்த நிலையில், அவரது உடல்நிலை மோசமானது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருச்சி முகாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் சென்னை மருத்துவமனையில் மரணம் அடைந்தது வரை உள்ள தகவல்கள் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு நடவடிக்கை
மேலும், இலங்கை தூதரக அனுமதி, இறப்புச் சான்று, பயண ஆவணம், உடல் பதப்படுத்துதல் சான்று ஆகியவற்றை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உரிய சான்றிதழ்களை பெற்று மத்திய அரசிடம் தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 4 ஆவணங்களும் வழங்கப்படும் பட்சத்தில் உடனடியாக உடலை அனுப்பி வைப்பதற்கான அனுமதி தாமதமின்றி வழங்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றியதை அடுத்து, வரும் மார்ச் 4ம் திகதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |